தமிழே!

தமிழ் இனி மெல்ல....... (என்னவாகும்?) ஒரு காலத்தில் கோலோச்சிய தமிழ், இனியும் எப்பொழுதும் சிறந்தோங்க வேண்டும் என்பதே அவா!

தமிழுக்கு தடா!

தமிழ்நாட்டில் ஓரிடத்தில் அதுவும் படித்தவன் முதல் பாமரன் வரை கூடும் ஓர் ஆலயத்தில் தமிழிற்கு தடை எனில், தமிழ்நாட்டில் இளிச்சவாயர்கள் அதிகரித்து விட்டார்கள் என சிலர் நினைப்பது போல் தோன்றுகிறது.
இந்நிலை இப்படியே தொடருமாயின், அவர்கள் நினைத்திருக்கும் இளிச்சவாயர் நிலையை உறுதிப்படுத்த நாம் தயாராகிவிட்டோம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

சிதம்பரத்தில் ஓர் இந்துக்கோவிலில் தமிழில் தேவாரம் பாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி அறிந்தேன்.

இது வேறு ஏதாவது தனிப்பட்ட நபர்கள் சார்ந்த பிரச்சனை எனில் வேறு விடயம். ஆனால் உண்மையிலேயே அக்கோவிலில் யாருமே தமிழில் பாட தடை எனில் இது பாரதூரமான விடயமே.

இப்படியே ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட சொத்து என தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தமது விருப்பத்திற்கோ அல்லது வெளிநாட்டு புல்லுருவிகளின் விருப்பத்திற்கோ, ஒவ்வோரு மொழிகளைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டால், அதுவும் அங்கே எம் தாய்த் தமிழிற்கே தடை விதிக்கும் ஒரு நிலையை உருவாக்கி விட்டால், தமிழ் நாடு தமிழுக்கு தாய்வீடு என்ற நிலையை எப்படிக் கட்டிக் காக்க முடியும்.

பிரான்சிலே ஒரு பிரதேசத்தில் இப்படி ஒரு பொதுமக்கள் பயன்பாட்டு நிலையத்தை உருவாக்கி அங்கே "பிரஞ்" க்கு தடை விதிக்க முடியுமா? அல்லது அப்படியே ஜேர்மனியில் "டொச்" இற்கு தடை விதிக்க முடியுமா?

நடிகர் சத்தியராஜ் ஒரு படத்தில் சொன்னது போல தமிழ்நாட்டில் தான் இளிச்சவாயர்கள் அதிகரித்து விட்டார்கள் என்பதை நிரூபிப்பது போல் அல்லவா இருக்கிறது இச்சம்பவம்.

அதுவும் தமிழறிஞர் கலைஞர் கருனாநிதி ஆட்சிக்காலத்தில்!

நிலைமை இப்படியே போனால், விரைவில் தமிழுக்கு பட்டையோ, நாமமோ நிச்சயம்.

தமிழ் எப்படி வாழப் போகிறது? - 2

புலம் பெயர்ந்த நாடுகளில் தான் அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடி தேவைகளை நிறைவேற்றவேண்டியுள்ளது, வேலை செய்யுமிடங்களில் அந்த நாட்டு பயன்பாட்டு மொழியை பயன்படுத்த வேண்டியுள்ளது, சிறுவர்கள் அந்நாட்டு சிறுவர்களுடன் சேர்ந்து அந்நாட்டு மொழிப் பாடசாலைகளில் பயில வேண்டியுள்ளது போன்ற காரணத்தால் தமிழ் பயன்பாடு குறைகிறதென்றால், தமிழ்நாட்டில் பிறந்து வாழ்பவர்களுக்கு என்னவாயிற்று?

எல்லோருமில்லாவிட்டாலும் அனேகர், இதில் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் அனைவருக்கும் விளங்கும்.

இந்நிலை ஏன்? வெள்ளைக்காரன் காலத்தில் இருந்த அடிமைத்தனத்தின் தாக்கம் இன்னும் எங்களைவிட்டு விலகாததாலா? அல்லது ???

வெள்ளைக்காரன் காலத்தில் ஆங்கில மொழி தெரிந்தவனுக்கு ஆங்கிலேயனிடத்தில் வேலை கிடைத்திருக்கக் கூடும். அதனால் அவனது வாழ்க்கைத் தரம் மற்றவர்களை விட சற்று உயர்ந்த நிலையில் இருந்திருக்கும். இந்நிலை ஆங்கிலம் தெரிந்தவன் முன்னால் ஆங்கிலம் தெரியாதவனை கூனிக்குறுக வைத்திருக்கும்.

ஆனால் இப்போது என்ன வந்ததென்று தெரியவில்லை?

அண்மையில் சண் தொலைக்காட்சியில் கிரிக்கட் வர்ணனையாளர் திரு. அப்துல் ஜபார் அவர்கள், பிரான்ஸ் நாட்டிலே வெளிவருகின்ற பத்திரிகைகள் இரண்டிலே ஓரிரு ஆங்கில வார்த்தைப் பிரயோகங்கள் காணப்பட்டதால், அப்பத்திரிகைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஐரோப்பிய நாடு ஒன்றிலே வாடகை வண்டி ஓட்டுனர் ஒருவருக்கு ஆங்கித்திலே நன்றி தெரிவித்ததற்கு அவ்வோட்டுனர் திரும்ப தன் மொழியிலே சொல்லச்சொல்லி அம்மொழியிலே(எனக்கு தெரியவில்லை) அவருக்கு சொல்லிக்கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இங்கே சில தமிழர்கள் தங்களுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதில் பொருமைப்பட்டுக் கொள்கிறார்கள். தமிழ் தெரிந்தவர்கள் என்று காட்டிக்கொண்டால் அது தங்களுக்கு இழுக்கு என்று கருதுகிறார்கள்.

ஆதி மனிதனில் இருந்து தற்கால நாகரிகமடைந்த என்று கூறப்படும் மனிதர்கள் நாங்கள் வெகு தூரம் வந்துவிட்டோம் என்று கூறுவதைப் போல, தமிழில் இருந்து நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம் என்று பகட்டாகக் காட்டிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் தீர்வு என்னவாக இருக்கமுடியும்?

வாசகர்களது பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அடுத்த பதிவில்.......

தமிழ் எப்படி வாழப்போகிறது?

தமிழ் ஆதி மொழியாக இருந்தது, அதற்கு ஆதாரங்களும் உள்ளன.
தமிழ் அறிவியல் மொழியாகவும் இருந்தது, அதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
தமிழ் அழகிய மொழியும் கூட,

இருந்தும் தமிழ் ஏன் அனைவரையும் கவரத் தவறியது.
பிறப்பால் தமிழர்கள் அடங்கலாக, பிறந்து தற்போது வாழும் மண்கூட தமிழாக இருப்பவர்கள் வரை.

தமிழின் தொன்மையை ஆராய்கிறோம், அறிகின்றோம், அதற்கான சான்றுகளை அறிக்கைகளாக சமர்ப்பிக்கின்றோம்.
ஆனால் நிகழ்காலத்தில் தமிழ் பயன்பாடு அருகி வருவது யாரும் மறுக்க முடியாத உண்மை.

நான் ஒருமுறை பாவலர் அறிவுமதி அவர்களை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது.
திடீரென காணநேர்ந்ததால் நீண்ட நேரம் கலந்துரையாட முடியவில்லை.
ஆனால் அவரிடம் ஒன்றே ஒன்றைக் கேட்டேன்.
"ஐயா! போகிற போக்கில் தமிழ் அருகிவிடும் போல் தோண்றுகிறதே! தமிழகம் மற்றும் இலங்கை தவிர்ந்த மற்றைய இடங்களில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது தலைமுறையாக வாழும் தமிழரில் அனேகர் தமிழை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே! தமிழ் வாழ்வதும் இல்லாது போவதும் அவர்களுக்கு ஒன்றாகப் படுகிறதே! தமிழை அதன் அழிவில் இருந்து தடுக்க வழியே இல்லையா?"

அவருக்கும் அதற்கு நீண்ட விளக்கம் கொடுக்க நேரம் இருந்திருக்கவில்லை. சுருக்கமாக "தமிழ் ஒருபோதும் அழிந்து விடாது, ஏனென்றால் தமிழருக்கு என்று ஒரு நாடு இல்லாமல் இருப்பதே தமிழ் பற்றி நாம் அச்சமுறக் காரணமாக இருக்கிறது. ஈழம் மலர்ந்து விட்டால்(தமிழுக்கு ஒரு நாடு) தமிழ் வாழும்" என்றார்.

அவர் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் தமிழகத்தையும், ஈழத்தையும் தவிர தமிழர் வாழும் ஏனைய நாடுகளில் - அது பிஜி, தென்னாபிரிக்கா போன்ற ஆகப்பழைய தமிழர் வாழும் நாடுகளில் இருந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடைக்கால தமிழர் வாழும் நாடுகள் வரை, தமிழின் நிலை சொல்லக்கூடிய அளவுக்கு ஆரோக்கியமாக இல்லை என்பதே என் கருத்து.

இதில் தமிழுக்காக பாடுபடுபவர்கள் இந்நாடுகளில் ஓரளவு உள்ளபோதும், அவர்களால் அனைத்து தமிழர்களையும் தமிழின் அல்லது தாய் மொழியின் முக்கியத்துவத்தினை உணரவைக்க முடிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

தற்போது அண்மையில் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து பலநாடுகளில் வாழும் தமிழர்கள் கூடி அனேகமாக முதலாவது தலைமுறையாக உள்ளபடியால் தமிழ் அதிகளவில் பயன்பாட்டு மொழியாக உள்ளபோதிலும், அவர்களது அடுத்த தலைமுறை அந்தந்த நாட்டு மொழிகளையே பயன்பாட்டு மொழியாக கொண்டுள்ளனர். இப்போக்கு இனிவரும் அடுத்தடுத்த தலைமுறையினர் மத்தியில் தமிழை எதிர்பார்க்க முடியாது செய்து விடுமோ? என்ற ஏக்கம் நியாயமானதே.

ஏன் தமிழ்நாட்டில் கூட .......

(அடுத்த பதிவில் தொடருகிறேன்....)

என் குழப்பத்திற்கு என்ன பதில்?

தமிழ் தொடர்பாக காதினிலே விழுந்து கொண்டிருக்கிற விடயங்கள் எனக்கு மிகவும் கவலையைத் தருவதாக இருந்ததன் விளைவே இவ் வலைப்பூவின் உதயம்.


*"தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற ஒன்று


*தமிழ் சோறு போடுமா? தமிழைப் படிப்பதால் என்ன இலாபம், அதற்கு செலவு செய்யும் நேரத்தை ஆங்கிலத்தை படிப்பதில் செலவு செய்தால் பயனுண்டு என்று ஓரிரு வருடங்களுக்கு முன் மலேசியாவில் பிறப்பால் தமிழர் ஒருவர் என்னிடம் கேட்டது மனதிற்கு மிகவும் இரணமாக இருந்தது.


*உலகில் அருகி வரும் மொழிகளிலே தமிழும் முன்னணியில் இருப்பதாகவும் ஒரு செய்தி படித்தேன்.


இப்படிப் பலப் பல!


நாளை வரும் சந்ததிக்கு:


"முன்னெரு காலத்திலே தமிழ் என்றொரு மொழி இருந்தது!
அதன் எழுத்து வடிவங்கள் இப்படி இருந்தன!"


என்றெல்லாம் கல்லுரிகளிலே சரித்திரப் பாடத்தில் இடம் பெறும் ஒரு விடயமாக "எம்முயிர்த் தமிழ்" ஆகிவிடக் கூடாது என்ற ஆதாங்கத்தில் இவ் வலைப்பூவினை தொடங்குகின்றேன்.


தமிழின் வளர்ச்சி தொடர்பான ஆக்கபூர்வமான வாதங்களை இவ்வலைப்பூ மூலம் எடுத்துச் செல்வதனூடாக எம்முடைய உயிர் போன்ற மாபெரும் தமிழின் ஆரோக்கியத்தில் நாமும் சிறு பங்கு வகிக்கலாம் என்ற அவாவிலும் உங்கள் அனைவரதும் ஒத்துளைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் ஆரம்பிக்கிறேன்.
(நான் ஒரு தமிழ் மேதாவியோ, அறிஞரோ அல்ல. கோடாணு கோடி தமிழர்களில் நானும் ஒருவன், அவ்வளவே. எனவே எனது கருத்துக்களில், ஆக்கங்களில், எழுத்துக்களில் காணப்படும் தவறுகளை சுட்டிக்காட்ட தவற வேண்டாம்)

அன்பர்களே!!!

தமிழ் படும் பாடு(என்னவென்று இப்போது கேட்காதீர்கள்), எனது பார்வையில் சிறிது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது என்னவென்றால் ........!


அதைப்பற்றித்தான் இனிமேல் விவாதிக்கலாம் என்று இதை ஆராம்பிக்கிறேன்


வலைப்பூவில் தமிழன்பர்கள் அனைவரும் தமிழை உயிராக மதிப்பவர்கள் - உண்மைதானே?


இனி விரியப்போகும் இவ்வலைப்பூவை பார்த்துப் பார்த்துவிட்டுப் போகாமல் தயவுசெய்து உங்கள் பின்னூட்டங்களை தாராளமாக இட்டு, புட்டுப் புட்டு வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

ஆதலால் இது இரண்டாவது!

"குறைந்தது 3 படைப்புக்கள் எழுதிய பின்னர் சேர்க்கைக்கு அளிக்கவும்" என்று தமிழ்மணத்தில வருகுது. முக்கி முக்கி ஏதாவது இரண்டை எழுதிப்போட்டு ஒருத்தரும் பாக்காம,

3ஆவதும் இனி எப்ப எழுதிமுடியுமோ தெரியாது, அதுவரை தூங்கிக்கொண்டிருக்க மனம் வராம,

இது 2வது கணக்கில.

மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்ன!!

வலைப்பூ பரிசோதனை 1 ... 2 ... 3....

சும்மா! இப்பதான் ஒருமாதிரி தொடங்கிறன். வாழ்த்துங்கோ!